யாழ் அரியாலையில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நான்காவது கிளை திறந்து வைக்கப்பட்டமை

பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இலவச தொழிற்பயிற்சி நெறி
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வரும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நான்காவது கிளை அலுவலகம் இன்று யாழ்ப்பாணம், அரியாலையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன், பிரதம அதிதியாக கலந்துகொண்ட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் த. சத்தியமூர்த்தி அவர்கள் நாடா வெட்டி புதிய கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார்.
ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தனிமனித மேம்பாட்டு வழிநடத்துனரும் பத்மஷாலா நல்வாழ்வு நிறுவனத்தின் நிறுவுனருமான நளினாசினி அம்பிகைபாதன், வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் நிறுவனர் தரன் ஶ்ரீ, வன்னி தமிழீழ மக்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் நிரூபன் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
புதிய கிளை அலுவலகத்தின் ஊடாக பெண்களுக்கான தையல் பயிற்சி, ஆரி வேலைப்பாடு, கேக் ஐசிங், அழகுக்கலை உள்ளிட்ட பல்வேறு இலவச தொழிற்பயிற்சி வகுப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக, கிறிஸ்தோபர் மற்றும் எமி (கனடா) அவர்களின் நிதி அனுசரணையில் தையல் பயிற்சி நெறி இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பெண்களுக்கு தொழில்திறன்களை வழங்கி, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் தன்னம்பிக்கையையும் உயர்த்தும் நோக்கில் இந்த இலவச கற்கைநெறிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் நான்காவது கிளை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டிருப்பது சமூக முன்னேற்றத்தை நோக்கிய முக்கியமான முயற்சியாகக் கருதப்படுகிறது.



































































