சுய பலத்தில் ஓடாமல் தேவ பலத்தோடு ஓடுவோம் – நியூசிலாந்து இணைப்பாளர்
எமது சுய பலத்தில் ஓடினால் ஓர் நாள் வீழ்வது நிச்சயம். ஆனால் ஆண்டவர் பலத்தில் ஓடினால் தொடர்ந்து எம் ஓட்டத்தை சிறப்பாக நிறைவு செய்யலாம். அப்போஸ்தலன் ஆகிய பவுல் தனது குதிரை பலத்தை நம்பியும் தனது திறமையை நம்பியும் தமஸ்கு நோக்கி புறப்பட்டார். ஆனால் என்ன நடந்தது. தடுமாறி விழ நேரிட்டது. வீழ்ந்து தள்ளாடி எழுந்த அவர் பிற்பாடு தேவ பலத்தோடு ஓடினார். மிக சிறப்பாக தன் ஓட்டத்தை நிறைவு செய்தார். இவ்வாறே நாம் நமது ஓட்டத்தை ஓடுவோம் என தனது வாழ்த்து செய்தியில் ஜீவ ஊற்று அன்பின் கரம் நியூசிலாந்து இணைப்பாளர் அறிவுறுத்தினார்.
கடந்த 01.09.2019 அன்றைய தினம் ஜீவ ஊற்று அன்பின் கரம் தனது ஐந்து ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு முல்லைத்தீவு இயேசு அழைக்கிறார் திருச்சபையில் நன்றி ஆராதனையை நடாத்தியது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ஆண்டவரின் பணி உன்னதமானது, மேன்மையானது. நாம் ஒன்றாக இணைந்து இன்னும் வேகத்துடன் உற்சாகமாக இந்த பணியினை முன்னெடுத்து செல்ல வேண்டும். ஆண்டவருக்கு கொடுக்கும் போது எழும் மகிழ்ச்சி அது விபரிக்க முடியாது. கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் என்ற ஆண்டவரது வார்த்தை எப்பொழுதும் உண்மையானது. நாம் ஆண்டவருக்கு கொடுத்தோம் அவர் எம்மை நிறைவாக ஆசீர்வதித்தார். ஒரு குறைவு இல்லாமல் தேவன் நிறைவாக நடாத்தி வருகின்றார். ஆண்டவர் ஒருவருக்கே சகல கனமும் மகிமையும் உண்டாவதாக என்றும் தெரிவித்தார்.